பில்லூர் அணையில் பரிசல் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பில்லூர் அணையில் பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-05-14 20:30 GMT

காரமடை

பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பில்லூர் அணையில் பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பரளிக்காடு பகுதியில் இயற்கை எழில் மிகுந்த சூழல் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 20 பரிசல் ஓட்டுனர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று கோடை விடுமுறையையொட்டி பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பயணிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் வந்திருந்தனர். முதலில் அவர்களுக்கு சுக்கு காபி வழங்கப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகள் பில்லூர் அணையில் பரிசல்களில் சவாரி செய்தனர். முன்னதாக அவர்கள் உயிர் பாதுகாப்பு கவச உடை அணிந்தனர்.

3 நாட்கள் அனுமதி

சவாரியின் போது, அணையின் இயற்கை அழகு, மலைகளை மோதி சென்ற மேகக்கூட்டம், பசுமையான வனப்பகுதி போன்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். இதையடுத்து வனத்துறை சார்பில் மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, குருமா, தயிர் பச்சடி, சிக்கன் குழம்பு, களி, கீரை, தயிர் சாதம் போன்றவை வழங்கப்பட்டது. பின்னர் பரளிக்காடு மின் உற்பத்தி நிலையம் அருகே ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் சூழல் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் வாரம் வரை வாரத்தில் 3 நாட்கள் வரலாம். இங்கு சூழல் சுற்றுலா கட்டணம், உணவு உள்பட பெரியவர்களுக்கு ரூ.600, 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்