தென்பெரம்பூர் அணை சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?- சுற்றுலா பயணிகள்
சிறுவர் பூங்கா பராமரிக்கப்படுவதுடன் தென்பெரம்பூர் அணை சுற்றுலாதலமாக மேம்படுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிறுவர் பூங்கா பராமரிக்கப்படுவதுடன் தென்பெரம்பூர் அணை சுற்றுலாதலமாக மேம்படுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்பெரம்பூர் அணை
தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. கல்லணை தலைப்பில் இருந்து வெளியேறும் காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே தென்பெரம்பூரில் உள்ள அணைக்கட்டில் இருந்து வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு என 3 ஆறுகளாக பிரிகின்றன.
இதை நீரொழுங்கி எனவும், அணைக்கட்டு எனவும் அழைக்கின்றனர். இந்த அணைக்கட்டில் இருந்து 3 ஆறுகளாக பிரிந்து செல்வதே அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. தண்ணீர் பாயும் நாள்களில் பொதுவாகவே இங்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வார்கள். விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து சுற்றுலாதலம் போல் காட்சி அளிக்கும்.
சிறுவர் பூங்கா
அணைக்கட்டுக்கு அருகே வெண்ணாற்றுக்கும், வெட்டாறுக்கும் இடையில் மரங்களுக்கு நடுவே சிறுவர்களுக்கான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜல்லிக்கட்டு வீரன் காளையை அடக்குவது போன்ற சிலை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சரஸ்வதிசிலை, அகத்தியர் சிலை, யானை சிலை ஆகியவை உள்ளது. மேலும் பூங்கா சுற்றுச்சுவரில் தேசிய தலைவர்கள் படங்கள், விலங்குகள் படங்கள் வரையப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள மரங்களின் அடிப்பகுதியை சுற்றி வட்ட வடிவில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு சிமெண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிமெண்டு சிலாப்புகளால் ஆன இருக்கைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த இருக்கைகளில் அமர்ந்து வெண்ணாற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்லும் அழகை பார்த்து மகிழலாம். வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்புகாவிரி என்ற பாசனவாய்க்கால் செல்கிறது.
குளித்து மகிழலாம்
தண்ணீரின் தேவைக்கு ஏற்ப அந்த வாய்க்காலில் பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்து விடுகின்றனர். முட்டிக்கால் அளவில் தண்ணீர் செல்லக்கூடிய அந்த வாய்க்காலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்து ஏதுமின்றி குளித்து மகிழலாம்.
மெயின் ஆறுகளில் ஆழம் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணைக்கு மேல் இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய அளவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மக்கள் சாப்பாடு தயார் செய்து எடுத்து கொண்டு வருவதுடன் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்ந்துவிட்டு செல்கின்றனர். இப்படி மக்கள் பொழுதுபோக்கி செல்வதற்கு சிறந்த இடமாக காணப்பட்டாலும் முறையான பராமரிப்பு இல்லை.
கழிவறை வசதி
பூங்காவில் ஊஞ்சல் இல்லாமல் வெறும் இரும்பு சங்கிலி மட்டுமே தொங்கி கொண்டு இருக்கிறது. இருக்கைகளும் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. சிறுவர்கள் சறுக்கு விளையாடும்போது அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க மணல் எதுவும் கொட்டப்படாமல் உள்ளது. மேலும் பெண்கள், சிறுமிகள் என பலரும் வாய்க்காலில் ஆனந்தமாகக் குளித்துவிட்டு உடைமாற்றுவதற்கான இடம் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பறை வசதியும் சுத்தமாக இல்லை. ஆறு பாய்கின்ற இடத்தில் இருந்தாலும் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வசதிக்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. தஞ்சை பகுதியை சேர்ந்த மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு இடமாக திகழ வேண்டிய தென்பெரம்பூர் அணைக்கட்டு முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் மக்களை கவரும் வகையில் இல்லை. எனவே பூங்காவை புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைப்பதுடன் போதுமான அளவு இருக்கைகளை அமைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் பல்வேறு விளையாட்டு உபகரணங்களையும் நிறுவ வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.