சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
உச்சிப்புளி அருகே அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பனைக்குளம்
உச்சிப்புளி அருகே அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பள்ளத்தில் கவிழ்ந்தது
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் வேன் ஒன்றில் நேற்று முன்தினம் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இரவு ராமேசுவரத்தில் தங்கிய அய்யப்ப பக்தர்கள் நேற்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதன் பின்னர் வேன் மூலம் மீண்டும் ஆந்திர மாநிலம் விஜயவாடா புறப்பட்டுள்ளனர். இந்த வேனை ஆந்திராவை சேர்ந்த சர்தார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இதனிடையே அய்யப்ப பக்தர்களுடன் சென்ற வேன் பிரப்பன்வலசைக்கும்-உச்சிப்புளிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த வேன் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயம்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உச்சிப்புளி போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்த அய்யப்ப பக்தர்களை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதுகாப்பாக மீட்டு சாலையில் நிறுத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். பள்ளத்தில் கவிழ்ந்ததால் வேனின் முன் பகுதி கண்ணாடி நொறுங்கி பலத்த சேதமடைந்ததால் இந்த வேனில் வந்து அய்யப்ப பக்தர்கள் மாற்று வாகனம் மூலம் ஆந்திரா புறப்பட்டு சென்றனர்.