சில்லடி கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்- சுற்றுலா பயணிகள் அவதி
நாகூர் சில்லடி கடற்கரையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நாகூர் சில்லடி கடற்கரையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஆண்டர் தர்கா
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டவர் சன்னதியில் பிரார்த்தனை முடித்துக்கொண்டு சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக அங்கு உள்ள சில்லடி கடற்கரைக்கு செல்லுவது வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சில்லடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
துர்நாற்றம்
அதேபோல நாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் சில்லடி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் நாகூர் சில்லடி கடற்கரையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பொதுமக்கள் அமரும் இடங்களில் அதிக அளவில் குப்பை தேங்கி கிடப்பதால் தூர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து முகம் சுழித்தபடி உடனடியாக திரும்பி செல்கிறார்கள். பொழுதுபோக்கு இடமாக விளங்கி வரும் சில்லடி கடற்கரை இப்படி குப்பை மேடாக காணப்படுவது பெரும் வேதனை அளிக்கிறது என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
எனவே நாகூர் சில்லடி கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, தூய்மையாக பராமரிக்கவும், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.