வேளாங்கண்ணி கடற்கரையில் ஆபத்தான நிலையில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம் சுற்றுலா பயணிகள் அச்சம்

வேளாங்கண்ணி கடற்கரையில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம் ஆபத்தான நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2023-01-21 19:00 GMT

வேளாங்கண்ணி கடற்கரையில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம் ஆபத்தான நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. வங்கக்கடலோரம் எழில்மிகு பிரமாண்ட கட்டிட அமைப்புடன் காட்சி அளிக்கும் இந்த பேராலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பயணிகள் வருகிறார்கள்.

பல்வேறு சிறப்பு வாய்ந்த வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடலில் உற்சாக குளியல்

குறிப்பாக ஆண்டு திருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஈஸ்டர் போன்ற பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவாக வந்து செல்வார்கள். இது தவிர சாதாரண நாட்களில் கூட வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அவ்வாறு வேளாங்கண்ணிக்கு வருபவர்கள் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள், மீன் கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. உணவகங்களில் அமர்ந்து கடலை கண்டு ரசித்தபடி சாப்பிடுவது சுற்றுலா பயணிகளின் வாடிக்கை. இதனால் வேளாங்கண்ணி கடற்கரையில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

கண்காணிப்பு கோபுரங்கள்

கடலில் குளிப்பவர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கவும், திருட்டு, வழிப்பறி போன்றவற்றை தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் வேளாங்கண்ணி கடற்கரையில் உயர் மட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆழத்துக்கு சென்று குளிப்பவர்களை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வந்தனர். இந்த நிலையில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட மண்ணரிப்பு காரணமாக, தெற்கு கடற்கரையோரம் உள்ள ஒரு கண்காணிப்பு கோபுரம் சேதமடைந்தது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கண்காணிப்பு கோபுரம் கீழே விழுந்தது. இரவில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வடக்கு கரையோரத்தில் உள்ள உயர்மட்ட கண்காணிப்பு கோபுரத்தின் அடிப்பகுதி அரிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அச்சம் அடைந்துள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக அந்த கண்காணிப்பு கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து கோவையிலிருந்து குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த காஷ்கர் கூறும்போது:-

அபாய நிலையில்...

நான் குடும்பத்துடன் ஆண்டுக்கு ஒரு முறை வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவாக வருவேன். இங்கு வந்தால் அன்னையை தரிசித்து விட்டு கடலில் குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். கடந்த ஆண்டு வேளாங்கண்ணிக்கு வரும்போது கடல் அதிக அளவு உட்புகுந்து இருந்தது. இதனால் கடற்கரை ஓரமுள்ள கடைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. தற்போது தான், கடல் சற்று உள்வாங்கி கடற்கரை தெரியும் படி காட்சியளிக்கிறது.

கடற்கரை ஓரம் உள்ள உயர் மட்ட கண்காணிப்பு கோபுரம் சேதமடைந்து உள்ளது. கோபுரத்தின் மேல் ஏறும் படிக்கட்டு கைப்பிடிகள் உடைந்து அபாய நிலையில் காட்சி அளிக்கிறது.

அப்புறப்படுத்த வேண்டும்

மேலும் அடிப்புரத்தில் கான்கிரீட் காரைகள் பெயர்ந்தும் உள்ளது. இதனால் அருகில் செல்வதற்கே அச்சமாக உள்ளது. அருகில் தெற்கு புறத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரம் இடிந்து விட்டது நினைவில் உள்ளது. அதேபோல இந்த கோபுரமும் இடிந்து விழுந்து உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு இதனை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அருகில் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்