கரடு-முரடான சாலையில் கடினமான பயணம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரடு-முரடான சாலையில் கடினமான பயணம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

Update: 2022-10-24 09:27 GMT

சென்னை:

வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதையும், கண்ணீரில் தவிப்பதையும் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலையோரங்களில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இடையே சுணக்கம் ஏற்பட்டு ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணிகள் நிறைவடையுமா? என்ற கேள்வி, சந்தேகம், விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இப்பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன.

இந்த நிலையில் இந்த பணிக்காக தெருக்களில் தோண்டப்பட்ட சாலைகள் பல இடங்களில் முறையாக சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பளிச்சென்று காட்சி அளித்த பல சாலைகள் இன்றைக்கு மோசமாகவும், பரிதாபமான நிலையிலும் இருக்கிறது.

கொடுங்கையூர் எம்.ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள உள்புற சாலைகளின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. கரடு-முரடாகவும், மேடு-பள்ளங்களாகவும் சாலைகள் காட்சி அளிக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் அடங்கி உள்ள ராஜன் நகர், பெரியார் நகர், பூம்புகார் நகர், எம்.ஜி.ஆர். போன்ற நகர்களின் தார் சாலைகள், சிமெண்டு சாலைகள் களிமண்ணால் சூழப்பட்டுள்ளது. இதை பார்க்கிறபோது இங்கே இருந்த ரோடு எங்கே? என்று கேட்க தோன்றுகிறது.

களி மண்ணால் சிறுமழை பெய்தாலே சாலைகள் சகதி காடாக மாறி விடுகின்றன. எனவே கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் அங்குலம், அங்குலமாக காலடி எடுத்து வைத்து நடந்து செல்லும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் வழுக்கி விழுந்து விடக்கூடாது என்பதற்காக நத்தை வேகத்தில் வாகனங்களில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. என்னதான் கவனமாக சென்றாலும் வழுக்கி விழும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

சென்னை நகரில் உள்ள பல உள்புற சாலைகளும் அபாயகரமான நிலையிலேயே இருக்கின்றன. சாலைகள் சிதறியும், குதறியும் காணப்படுவதால் நடந்து செல்வோர்களின் கால்களை கற்கள் பதம் பார்க்கின்றன. வாகனங்களின் டயர்கள் அதிகம் தேய்மானம் அடைகின்றன.

குண்டும், குழியுமாக சாலைகள் இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வது ஏதோ குதிரை வண்டியில் சவாரி செல்வது போன்று உள்ளது. சாகச பயணம் மேற்கொள்வது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கலக்கத்தை உண்டாக்குகிறது. இந்த சாலையில் நடந்து சென்று ஆபத்தை விலைக்கு வாங்கி கொள்ளக்கூடாது என்ற மன நிலையில் வயதானவர்கள் நடைபயிற்சி செல்லக்கூட தயங்கும் நிலை இருக்கிறது.

கரடு-முரடான சாலையில் துள்ளி, துள்ளி வாகனங்களை ஓட்டி செல்லும் நிலை இருப்பதால் முதுகு வலி, கழுத்து வலி மற்றும் முதுகு தண்டுவட பாதிப்புக்கு வாகன ஓட்டிகள் ஆளாக நேரிடுகிறது. தெருக்களில் ஓடி-ஆடி உற்சாகமாக விளையாடிய குழந்தைகளின் குதூகலத்துக்கு மோசமான சாலை முட்டுக்கட்டை போட்டுள்ளது. உதிர்ந்து போய் உள்ள உள்புற சாலைகள் மக்களை கடும் சிரமத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி உள்ளது. எப்போது இந்த சாலைகள் புத்துயிர் பெறும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவும், ஏக்கமாகவும் இருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுத்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளும், பாதாள சாக்கடை பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் முழு கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிகளால் சாலைகள் சேதம் அடைந்திருப்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்துதான் பணிகள் நடைபெறும் இடங்களில் சிரமத்துக்கு வருந்துகிறோம் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மழை வெள்ள சிரமத்தில் மக்கள் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் காணப்படுகிறது. விரைவில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது.

இந்த நேரத்தில் சாலைகளை சீரமைத்தால் அது பயன் அளிக்காது. எனவே மழைக்காலம் முடிந்தவுடன் சேதமடைந்த சாலைகள் கணக்கிடப்பட்டு போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிக சிரமம் விரைவில் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்