குளத்தில் கட்டுக்கட்டாக வீசப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

நாகா்கோவிலில் குளத்தில் கட்டுக்கட்டாக வீசப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நோட்டுகள் போலியானது என தெரிய வந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-06-24 18:45 GMT

நாகர்கோவில்:

நாகா்கோவிலில் குளத்தில் கட்டுக்கட்டாக வீசப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நோட்டுகள் போலியானது என தெரிய வந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வேம்பனூர் குளம்

குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதற்காக குளங்களில் உள்ள தண்ணீர் மதகுகள் மூலம் திறந்து விடப்படுகிறது. அத்துடன் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் குளங்களில் தண்ணீர் குறைவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீன் பிடித்து வருகிறார்கள்.

இதேபோல நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே வேம்பனூரில் பாசன குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை தூர்வாரும் பணி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக குளத்தில் உள்ள தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் குறைய தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதியை சோ்ந்த விவசாயிகள், சிறுவர்கள் காலையில் குளத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

அப்போது விவசாயிகள் வீசிய வலையில் ஒரு பிளாஸ்டிக் கவர் சிக்கியது. அவர்கள் அதை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அவற்றில் பெரும்பாலான நோட்டுகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்து கிழிந்து காணப்பட்டன. ஒருசில நோட்டுகள் சேதமடையாமல் இருந்தன. இதையடுத்து நனைந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகளை வெயிலில் உலர வைத்தனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வருகிற செப்டம்பர் மாதம் இறுதிவரை தான் செல்லும் என்றும், அவற்றை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. எனவே குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைத்த கருப்பு பணமா? என்ற கேள்வியும் எழுந்தது.

போலியானது

இதற்கிடையே குளத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவா்கள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை என்பதும், அவை குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. இதனால் பணத்தை பார்க்க ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்