தாளவாடி பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால்: தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்த
தாளவாடி பகுதியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டித்தீர்த்த கன மழை
தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடிக்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடியை அடுத்த தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, ராமரணை, காளிதிம்பம், இட்டறை, தடசலடி, மாவநத்தம் மற்றும் வனப்பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
போக்குவரத்து பாதிப்பு
கனமழை காரணமாக மாவநத்தம் அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதன்காரணமாக அந்த வழியாக பஸ்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் வெள்ளம் வடிந்த பின்னர்தான் வாகனங்கள் செல்ல தொடங்கின. இதனிடையே நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மரக்கிளை முறிந்து விழுந்தது
இந்த நிலையில் பலத்த மழையினால் மாவநத்தம் அருகே உள்ள சாலையில் மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கிளை சாலையோரத்தில் இருந்த மற்றொரு மரத்தின் மீது விழுந்தது. ஆனால் ரோட்டில் கீழே விழாமல் நடுரோட்டில் தொங்கியபடி இருந்தது. மேலும் சிறிய வாகனம் செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது. இதனிடையே நேற்று காலை 7.30 மணி அளவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் 15 பயணிகள் இருந்தனர். சாலையில் மரக்கிளை தொங்கி இருந்ததையும், சிறிய இடைவெளியையும் கண்ட டிரைவர், அந்த வழியாக சென்றுவிடலாம் என கருதி பஸ்சை ஓட்டிச்சென்றார். ஆனால் முடியவில்லை. இதனால் அந்த பஸ் நடுரோட்டில் நின்றது.
இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விரைந்து சென்று, பஸ்சின் மீது மரக்கிளை விழுந்து விடாமல், வெட்டி அகற்றினார்கள்.
காலை 9 மணி அளவில் ராட்சத மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.