ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2022-10-14 21:49 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி, ஊஞ்சலூர், மொடக்குறிச்சி, கோபி என பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய கனமழை பெய்தது.

பவானி வரதநல்லூர் அருகே உள்ள தாழக்குளம் ஏரி நிரம்பியது. அதிலிருந்து வெளியான உபரிநீர் பவானியை அடுத்த தொட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் இருக்கும் தாழ்வான வீடுகளை சூழ்ந்தது. தொட்டிபாளையம் பழைய காலனி, மணக்காட்டு காலனி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் தொட்டிபாளையம் பழைய காலனி அருகே சாலையை வெள்ளம் சூழ்ந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளிக்கு விடுமுறை

சாலை முழுவதும் தண்ணீர் குளமாக நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

பலத்த மழையால் காடையாம்பட்டி ஏரியும் நிறைந்தது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தண்ணீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் பவானி திருவள்ளுவர் நகரில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. பவானி பகுதியில் மட்டும் சுமார் 150 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அந்தியூரிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

போக்குவரத்து துண்டிப்பு

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து. அந்த பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதன்காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்