சூறைக்காற்றுடன் பெய்த மழை

வத்தலக்குண்டு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

Update: 2023-05-29 19:00 GMT

வத்தலக்குண்டு பகுதியில் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கணவாய்பட்டி பிரிவு என்னுமிடத்தில் மின்கம்பத்தில் மின்னல் தாக்கியது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பழைய வத்தலக்குண்டு கலைஞர் காலனியில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோடு அருகே ஒரு வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தகர மேற்கூரை சூறைக்காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் பழனியில் மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. நெய்க்காரப்பட்டி, மானூர், பாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது. அம்மையநாயக்கனூர், கொடைரோடு, மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி, குல்லலக்குண்டு ஆகிய பகுதிகளில் மாலை 3 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்