காவல் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை சந்திக்கவேண்டும்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!
பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். மேலும், பெயரளவில் உயர் அதிகாரிகள் ஒருநாள் சந்திப்பார்கள் என்ற நடைமுறை இருந்துவந்தது.
இந்த நிலையில், காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரந்தோறும் புதன் கிழமை அன்று காலை முதல் மாலை வரை ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று, அது தொடர்பான விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளை பொதுமக்கள் எளிதில் சந்திக்கும் வகையில் தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.