மாவட்ட விளையாட்டு போட்டி

மாவட்ட விளையாட்டு போட்டி

Update: 2022-11-23 12:09 GMT

திருப்பூ

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம், டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 82 மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

மகளிர் சிலம்பாட்ட போட்டி

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வியின் உத்தரவுப்படி திருப்பூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நடந்த மகளிருக்கான சிலம்பாட்ட போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி தொடங்கிவைத்தார். இதில் கம்பு சண்டை, ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு ஆகிய வகை போட்டிகள் நடந்தது. 14 வயதிற்குட்பட்டோருக்கு 6 எடை பிரிவுகளிலும், 17 வயதிற்குட்பட்டோருக்கு 9 எடை பிரிவுகளிலும், 19 வயதிற்குட்பட்டோருக்கு 8 எடை பிரிவுகளிலும் நடந்த இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்தம் 450 மாணவிகள் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சிலம்பாட்ட போட்டியில் மாணவிகள் உற்சாகமாக விளையாடினர். பல மாணவிகள் லாவகமாக கம்பை சுழற்றி பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில் அனைத்து பிரிவிலும் இருந்து மொத்தம் 23 மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

ேடக்வாண்டோ, ஜூடோ

இதேபோல், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்களுக்கான டேக்வாண்டோ, ஜூடோ போட்டியை உடற்கல்வி ஆய்வாளர் முருகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில் டேக்வாண்டோ போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கு 13 எடை பிரிவுகளிலும், 17 வயதிற்குட்பட்டோருக்கு 11 எடை பிரிவுகளிலும், 19 வயதிற்குட்பட்டோருக்கு 10 எடை பிரிவுகளிலும் நடந்த போட்டியில் மொத்தம் 315 மாணவர்கள் கலந்துகொண்டனர். சண்டை பிரிவு முறையில் நடந்த இந்த போட்டியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அனைத்து பிரிவிலும் மொத்தம் 34 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். இதேபோல், இந்த பள்ளியில் ஜூடோ போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கு 8 எடை பிரிவுகளிலும், 17 வயதிற்குட்பட்டோருக்கு 9 எடை பிரிவுகளிலும், 19 வயதிற்குட்பட்டோருக்கு 8 எடை பிரிவுகளிலும் நடந்த போட்டியில் மொத்தம் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாநில போட்டிக்கு தகுதி

இதில் தங்களின் நுணுக்கமான ஆட்டங்களின் மூலம் விளையாடி அனைவரையும் கவர்ந்தனர். இதில் மொத்தம் 27 பேர் முதலிடம் பிடித்தனர். இவ்வாறு 2 பள்ளிகளிலும் நடந்த சிலம்பம், டேக்வாண்டோ, ஜூடோ ஆகிய விளையாட்டுகளில் முதலிடம் பிடித்த 82 மாணவ-மாணவிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் குறைவான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளதாக விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்