தக்காளி கிலோ ரூ.50 ஆக குறைந்தது

நாகர்கோவில் சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50 ஆக குறைந்தது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-08-12 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50 ஆக குறைந்தது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வரத்து- உற்பத்தி அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை சரமாரியாக உயர்ந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளிலும் தக்காளி கிலோ ஒன்று ரூ.180 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு ரேஷன் கடைகள் மூலமாக வினியோகம் செய்தது. தக்காளியின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை குறைந்து கொண்டிருந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு ஏற்கனவே ஓசூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது குமரி மாவட்டத்தின் ஆண்டார்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், நெல்லை மாவட்டம் பணக்குடி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிக அளவு தக்காளி அப்டா மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

தக்காளி ரூ.50 ஆக குறைந்தது

இதனால் அப்டா மார்க்கெட்டில் தக்காளியின் விலை நேற்று முன்தினத்தைவிட நேற்று ரூ.30 வரை குறைந்தது. நேற்று முன்தினம் மொத்த கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ ரூ.50 ஆக குறைந்தது. இதேபோல் இஞ்சி விலையும் குறையத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ பழைய இஞ்சி நேற்று முன்தினம் ரூ.240-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ இஞ்சி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. புதிதாக வரக்கூடிய இஞ்சி ஒரு கிலோ நேற்று முன்தினம் ரூ.140-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று ரூ.120 ஆக குறைந்தது.

இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் சரிய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.90 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் நேற்று ரூ.70 ஆக குறைந்துள்ளது. இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. அதன் விவரம் (கிலோ கணக்கில்) வருமாறு:-

விலை விவரம்

கேரட்- ரூ.55, பீன்ஸ் ரூ.60, மிளகாய்- ரூ.65, சேனை-ரூ.60, வெள்ளரிக்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.40, தடியங்காய்- ரூ.35, பூசணிக்காய்-ரூ.25, நாட்டு கத்திரிக்காய்- ரூ.60, வரி கத்தரிக்காய்- ரு.40, வழுதலங்காய்- ரூ.40, முட்டைக்கோஸ்- ரூ.30, சவ் சவ்-ரூ.35, பீட்ரூட்- ரூ.35, பல்லாரி- ரூ.32, உருளைக்கிழங்கு- ரூ.30, முள்ளங்கி- ரூ.35, முருங்கைக்காய்- ரூ.25, வெண்டைக்காய்- ரூ.30, காலிபிளவர்- ரூ.35 என்ற விலையில் விற்பனையானது. தக்காளி விளைச்சலும், வரத்தும் அதிகரித்திருப்பதால் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்