அன்னவாசல்:
சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான தக்காளி கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையில் விற்கப்பட்ட நிலையில், சாகுபடி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து அன்னவாசல் பகுதியில் தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. தக்காளியின் விலை திடீரென உயர்ந்திருப்பதால் சாமானிய அடித்தட்டு மக்கள் அதனை வாங்க முடியாமல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதனால் ஒரு கிலோ வாங்க வேண்டிய இடத்தில் தற்போது கால் கிலோ, அரை கிலோ, வாங்கி செல்கின்றனர். அதேபோல் இந்த விலை உயர்வு தங்களையும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் கடைகளில் ரூ.50 வரையில் தக்காளி விற்கப்பட்டாலும் வாகனங்கள் மூலமாக ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு தக்காளி வாங்கினாலும் அது 2 நாட்களுக்கு மேல் தாங்குவதில்லை கெட்டு விடுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். அதேவேளையில் இந்த விலை உயர்வு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த மாதங்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயமும் விலை உயர்ந்து வருகிறது.