உடையார்பாளையம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
உடையார்பாளையம் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி ரூ.100-க்கு விற்பனை
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் கடந்த சில நாட்களாகவே திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனையானது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வாரச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் குறைந்த அளவு தக்காளியை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், நாள்தோறும் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் தக்காளியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சட்னி, சாம்பார், ரசம், சூப் உள்ளிட்ட பிரதான உணவு வகைகளில் தக்காளியின் பங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு தயாரிப்பில் தக்காளியை அதிகம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
விலை அதிகரிக்க வாய்ப்பு
சதம் அடித்த தக்காளி விலை குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- ஓசூரில் இருந்து உடையார்பாளையம் வாரச்சந்தைக்கு தக்காளி வருகிறது. 27 கிலோ கொண்ட ஒரு பெட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.1,000-க்கு வாங்கி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்தோம். இந்தநிலையில் தற்போது ஒரு பெட்டி ரூ.2,500 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து ஓசூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கேட்ட போது வழக்கமாக ஜூன், ஆகஸ்டு மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தக்காளி விலை ஏறுவது வழக்கம்.
ஆனால் தற்போது தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படும் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்து போனது. இதனால் தக்காளி விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்னும் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.