தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை
குமரி மாவட்டத்தில் தக்காளி வரத்து குறைவு காரணமாக அதன் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தக்காளி வரத்து குறைவு காரணமாக அதன் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வு
குமரி மாவட்டத்தில் சமையலில் தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. சுவையான கூட்டு வகைகள் தக்காளியை கொண்டு தயார் செய்யப்படுகின்றன. இதனாலேயே அனைத்து வீடுகளிலும் எப்போதும் தக்காளி இருப்பு இருக்கும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தக்காளிக்கு சில நேரங்களில் போதிய விலை கிடைப்பது இல்லை. இதனால் மூடை மூடையாக தக்காளியை சாலையில் வீசும் நிகழ்வுகள் நடந்துள்ளன. அதுவே சில சமயங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளி விலை ஏற்றம் பெறுகிறது.
அந்த வகையில் தற்போது தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அதிலும் குமரி மாவட்டத்தில் வழக்கமாக ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செயப்படும் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலும் நேற்று முன்தினம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரே நாளில் ரூ.30 உயர்ந்துள்ளது.
வரத்து குறைவு
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள வடசேரி கனகமூலம் சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், தக்கலை, களியக்காவிளை ஆகிய இடங்களில் முக்கிய சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு சிறு சந்தைகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
தக்காளி விலை ஏற்றம் குறித்து சந்தை வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, "வடசேரி கனகமூலம் சந்தைக்கு தினமும் ஓசூரில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் காவல்கிணறு மற்றும் குமாி மாவட்டத்தில் சில இடங்களில் தோட்டங்களில் விளையும் தக்காளியும் விற்பனைக்காக கனகமூலம் சந்தைக்கு வருகிறது. ஆனால் தற்போது தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து விட்டது" என்றார்.
இல்லத்தரசிகள் கவலை
இதே போல் வரத்து குறைவு காரணமாக மிளகாய் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது வழக்கமாக ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ மிளகாய் நேற்று ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி மற்றும் மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடசேரி சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-
கத்தரிகாய்-ரூ.45, பீன்ஸ்-ரூ.120, கேரட்-ரூ.80, முட்டைக்கோஸ்-ரூ.35, சேனைக்கிழங்கு-ரூ.30, பீட்ரூட்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.35 முதல் ரூ.40 வரை, இஞ்சி-ரூ.200, முருங்கைக்காய்-ரூ.35, புடலங்காய்-ரூ.30, தடியங்காய்-ரூ.20, சுரக்காய்-ரூ.35, பூசணிக்காய்-ரூ.20, சவ்சவ்-ரூ.35, முள்ளங்கி-ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.