தக்காளி விலை குறைந்தது

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.43-க்கு ஏலம் போனது.

Update: 2023-08-11 19:00 GMT


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.43-க்கு ஏலம் போனது.


தக்காளி ஏலம்


கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் விளையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, கிணத்துக்கடவில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தைக்கு கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவு தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யவில்லை.


இதனால் கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி வரத்து இல்லாமல் உள்ளது. செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 30 டன் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.57-க்கு விற்பனையானது.


விலை குறைந்தது


தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் தக்காளி வரத்து உள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்து உள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.43-க்கு ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.14 குறைவாகும். தக்காளி குறைந்த விலைக்கு ஏலம் போவதால், தற்போது கிணத்துக்கடவு பகுதியில் சில்லறை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. தற்போது விலை குறைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்