திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நாள்தோறும் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, சுற்றுவட்டார பகுதி மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. இதையொட்டி தக்காளி கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
இதேபோல் மார்க்கெட்டில் அவரைக்காய் கிலோ ரூ.60, கேரட், கத்தரிக்காய் தலா ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், முட்டைக்கோஸ், முருங்கைக்காய் தலா ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.40, முள்ளங்கி ரூ.10, இஞ்சி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.