சென்னையில் தக்காளி விலை ரூ.10 குறைந்தது..!

சென்னையில் தக்காளி விலை ரூ.10 குறைந்துள்ளது.

Update: 2023-06-28 02:07 GMT

சென்னை,

அன்றாட சமையலில் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை தாறுமாறாக எகிறி உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக இருந்ததால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் அங்கும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதுவே தக்காளி விலை உச்சம் தொடுவதற்கு காரணம் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

தக்காளி விலை வரும் நாட்களிலும் ஏறுமுகத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே தக்காளியை பதுக்கி விற்றால் கூடுதல் லாபம் பார்க்கலாம் என்று ஒரு சில வியாபாரிகள் மனக்கணக்கு போட்டு வருகின்றனர். இதனால் டன் கணக்கில் தக்காளி பதுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்யப்படும் என்றும் தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்தார்.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் இன்ரு ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விலை ரூ.60-க்கு விற்கப்படும் என அரசு கூறிய நிலையில் விலை குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்