விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
பாலக்கோடு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விளைச்சல் அதிகரிப்பு
பாலக்கோடு பகுதியில் பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் தக்காளிகள் அறுவடை செய்யப்பட்டு பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி பெட்டிகளில் அடுக்கி சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
பாலக்கோடு மார்க்கெட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் செடிகளிலேயே தக்காளி அழுகி வீணானது. இதனால் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.
விலை வீழ்ச்சி
இந்தநிலையில் பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன்படி நேற்று பாலக்கோடு மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.300-க்கும், சில்லரையாக ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் விற்பனையானது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் பெய்த தொடர் மழையால் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.