சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

Update: 2022-08-25 20:12 GMT

கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் சமயபுரம் சுங்கச்சாவடி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சுங்கச்சாவடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட 22 ஆயிரம் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் தற்போது காருக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணம் உயர்த்தப்பட்டு இனி ரூ.55 ஆக வசூலிக்கப்பட உள்ளது.

15 சதவீதம் கூடுதல்...

இதேபோல் பஸ்சுக்கான கட்டணம் ரூ.165-ல் ரூ.185 ஆகவும், லாரிக்கான கட்டணம் ரூ.265-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர கட்டணமாக காருக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,605 ஆகவும், பஸ்சுக்கு ரூ.4,905-ல் இருந்து ரூ.5,620 ஆகவும், லாரிக்கு ரூ.7,880-ல் இருந்து ரூ.9,035 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு தற்போதைய கட்டணத்தை விட 15 சதவீதம் கூடுதலாகும்.

துவாக்குடி

இதேபோல் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்கச்சாவடி வழியாக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.

இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணமும் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறை அந்த வழியாக பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணமான ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணமான ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், மாத கட்டணமானது ரூ.1,955-ல் இருந்து ரூ.2,210 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

இலகுரக வாகனங்கள்

இதேபோல் இலகுரக வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறைக்கு ரூ.115 என வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.130 ஆகவும், ஒரு நாளில் பலமுறை செல்வதற்கு ரூ.170-ல் இருந்து ரூ.195 ஆகவும், மாத கட்டணம் ரூ.3,425-ல் இருந்து ரூ.3,870 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி மற்றும் பஸ் செல்வதற்கு ஒரு நாளில் ஒரு முறைக்கு ரூ.230 என வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.260 ஆகவும், ஒருநாளில் பலமுறை சென்று வருவதற்கு ரூ.344-ல் இருந்து ரூ.385 ஆகவும், ஒரு மாத கட்டணம் ரூ.6,845-ல் இருந்து ரூ.7,735 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

பல அச்சுகள் கொண்ட வாகனம் நாள் ஒன்றுக்கு ஒரு முறைக்கு ரூ.365 ஆக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.415 ஆகவும், பலமுறை சென்று வருவதற்கு ரூ.550-ல் இருந்து ரூ.620 ஆகவும், ஒரு மாதத்திற்கு ரூ.11,005-ல் இருந்து ரூ.12,435 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது என்று சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்