இன்று ஆடிப்பெருக்கு: பெரம்பலூரில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
ஆடிப்பெருக்கையொட்டி பெரம்பலூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.650-க்கு விற்பனையானது.
ஏலம் மூலம் விற்பனை
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பூக்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், அந்த பூக்களை பெரம்பலூரில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்று ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் ஆடிப்பெருக்கு இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் இறைவழிபாட்டில் பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும்.
அந்தவகையில் தங்களுக்கு தேவையான பூக்களை ஏலம் மூலம் வாங்கி செல்ல பொதுமக்கள், வியாபாரிகள், பூக்கட்டி விற்கும் பெண்கள் உள்ளிட்டோர் நேற்று பெரம்பலூருக்கு வந்து தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பூக்களின் விலை விவரம்
ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.650-க்கும், முல்லை ரூ.450-க்கும், செவ்வந்தி ரூ.350 முதல் ரூ.400 வரைக்கும், அரளி ரூ.250-க்கும், ரோஜா ரூ.300-க்கும், சம்மங்கி ரூ.250 முதல் ரூ.300 வரைக்கும், மருவு 4 கட்டு ரூ.100-க்கும், துளசி 4 கட்டு ரூ.60-க்கும், மரிக்கொழுந்து 1 கட்டு ரூ.70-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேசங்கள் நடைபெறாது. இதனால் பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. தற்போது ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்றும் பூக்களின் விலை உயரும். ஆவணி மாதம் திருமணம் உள்ளிட்ட விஷேசங்கள் நடைபெறும் என்பதால் அப்போது பூக்களின் விலை இதைவிட உயரும், என்றனர்.