பழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்; மலர்தூவ ஹெலிகாப்டர் வந்தது

பழனி முருகன் கோவிலில் 6,7-ம் கால யாகபூஜைகள் நிறைவு பெற்றது. நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தின் போது மலர்கள் தூவ ஹெலிகாப்டர் பழனிக்கு வந்தது.

Update: 2023-01-26 18:15 GMT

பழனி முருகன் கோவிலில் 6,7-ம் கால யாகபூஜைகள் நிறைவு பெற்றது. நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தின் போது மலர்கள் தூவ ெஹலிகாப்டர் பழனிக்கு வந்தது.

முருகன் கோவில்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து 2019-ல் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள் கூட்டத்தில் ஜனவரி 27-ல் (நாளை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 18-ந்தேதி கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கிய கலசஸ்தாபனம் நடந்தது. 23-ந்தேதி மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டது. பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தினமும் 2 கால யாகபூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

அதன்படி நேற்று 5 கால யாகங்கள் முடிவு பெற்றன. நேற்று 6-ம் கால யாகபூஜை தொடங்கியது. அப்போது ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, விதை, தண்டு, வேர் மற்றும் மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்புயாகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் கட்டியம், கந்தபுராணம் பாடினர். தொடர்ந்து யாகம் நிறைவு பூஜை, திருமுறை விண்ணப்பம், முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு 7-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

நாளை(வெள்ளிக்கிழமை) காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. அப்போது பல்வேறு வகை பொருட்கள், மூலிகைகளால் சிறப்பு யாகம், தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து திருமுறை, கந்தபுராணம், கட்டியம், திருப்புகழ் பாடப்படுகிறது. பின்னர் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வாத்திய இசை முழங்க ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மங்கல இசை, அன்னப்படையல் கந்தபுராணம், திருமுறை பாடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மணக்கோலத்தில் சுவாமி பிரகார உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மூஷிக வாகனத்தில் விநாயகர், ஆட்டுக்கிடா வாகனத்தில் வீரபாகு, ரிஷப வாகனத்தில் உமா-மகேஸ்வரர், தங்மயில் வாகனத்தில் சின்னக்குமாரரும் உலா வருகின்றனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படுகிறது.

மேலும் அடிவாரத்தில் இருந்து முத்துக்குமாரசுவாமி கிரிவீதி, ரதவீதிகளில் உலா வந்து பெரியநாயகி அம்மன் கோவில் அடைதல் நடைபெற்று ராக்கால பூஜை நடைபெறுகிறது. பின்னர் இரவு 10 மணிக்கு காப்பு களைதல், திருமுளைப்பாலிகை களைதல் நடைபெற்று விழா முடிவு பெறுகிறது.

பழனி வந்த ஹெலிகாப்டர்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுரம், தங்கவிமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நேற்று கோவையில் இருந்து ஹெலிகாப்டர் பழனிக்கு புறப்பட்டு வந்தது. அந்த ஹெலிகாப்டர் பழனியாண்டவர் கலைக்கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்