தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1,858 மெட்ரிக் டன் உரம் வருகை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1,858 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் வந்து உள்ளது.

Update: 2022-08-17 14:36 GMT

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1,858 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் வந்து உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

டி.ஏ.பி. உரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளான கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் ராபி பருவத்தில் மக்காச்சோளம், பயறு வகைகள் சிறுதானியங்கள், பருத்தி மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் அடி உரங்களான டி.ஏ.பி. மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரத்து 658 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் நெல்லைக்கு வந்து சேர்ந்தது.

உரிமம் ரத்து

அங்கு இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1,858 மெட்ரிக் டன்களும், நெல்லை மாவட்டத்துக்கு 200 மெட்ரிக் டன்களும், தென்காசி மாவட்டத்துக்கு 350 மெட்ரிக் டன்களும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன்களும் பிரித்து வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,858 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரத்தில் 1153 மெட்ரிக் டன் மாவட்டத்தில் உள்ள 63 கூட்டுறவு சங்கங்களுக்கும், 705 மெட்ரிக் டன் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன.

விவசாயிகள் உரம் வாங்கும் போது கண்டிப்பாக தங்களது ஆதார் அட்டையை எடுத்து சென்று விற்பனை முனையக்கருவியில் பில் பெற்று உரம் வாங்க வேண்டும். ஒரு மூட்டை டி.ஏ.பி. உரத்துக்கு அரசு நிர்ணயித்து உள்ள ரூ.1,350-க்கு மிகாமல் டி.ஏ.பி. உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அனைத்து தனியார் உர விற்பனையாளர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதை மீறும் கடைகள் மீது உரிமம் ரத்து உட்பட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்