திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திரிசுதந்திரர்கள் பால்குட ஊர்வலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஊர்மக்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஊர்மக்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
பால்குட ஊர்வலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஆண்டுதோறும் ஆனி சஷ்டி திதி நாளில் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நேற்று 43-வது ஆண்டை முன்னிட்டு காலையில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் விரதமிருந்த பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தினர். சிலர் 16 அடி நீளம் உள்ள வேல் குத்தி இருந்தனர். அவர்கள் மேளதாளம் முழங்க 8 வீதிகளிலும் ஊர்வலமாக வந்து சன்னதி தெரு வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர்.
பூக்குழி இறங்கினர்
கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. மாலையில் பக்தர்கள் கோவில் கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் பொது திரிசுதந்திரர்கள் சபையினர் செய்திருந்தனர்.