நாங்குநேரி தாக்குதலில் காயமடைந்த மாணவர்-சகோதரிக்கு, ஜான்பாண்டியன் ஆறுதல்

நாங்குநேரியில் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த மாணவர், அவரது சகோதரிக்கு, ஜான் பாண்டியன் ஆறுதல் கூறினார்.

Update: 2023-08-18 19:31 GMT

நாங்குநேரியில் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த மாணவர், அவரது சகோதரிக்கு, ஜான் பாண்டியன் ஆறுதல் கூறினார்.

ஜான் பாண்டியன் ஆறுதல்

நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திராசெல்வி ஆகியோரை மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓட்டு அரசியல்

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் சகோதரி மீது சாதி ரீதியாக தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். சாதிய அடையாளங்களுடன் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து தடுக்க வேண்டும்.

நாங்குநேரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது கண்துடைப்பு நாடகம் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்பட்ட எந்த விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நீட் தேர்வை காரணம் காட்டி தற்கொலை செய்து கொள்கிறவர்கள் கோழைகள். கல்வியில் ஒரு படிப்பு கிடைக்காவிட்டால், அடுத்த படிப்பை தேர்வு செய்து முன்னேற வேண்டும். மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு போகக்கூடாது. நீட் தேர்வை ஒரு போதும் ரத்து செய்ய முடியாது. இது தி.மு.க.வினருக்கும் நன்றாக தெரியும். இருந்தாலும் ஓட்டு அரசியலுக்காக, ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறுகிறார்கள். இதில் தி.மு.க. மக்களை ஏமாற்ற வேண்டாம்.

தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. நாளை (ஞாயிற்றுக்கிழமை) உண்ணாவிரதம் அறிவித்து இருக்கிறார்கள். மதுரையில் அ.தி.மு.க. மாநாட்டை கண்டு பயந்து இந்த போராட்டம் நடத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்