மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
சாயர்புரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மொபட்டில் சென்ற பெண்
சாயர்புரம் அருகே புளியநகர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார் மனைவி ரேவதி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். புதுக்கோட்டையில் வசித்து வந்த ரேவதியின் தந்தை கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் ரேவதி புதுக்கோட்டையிலுள்ள தந்தை வீட்டில் தங்கி இருந்து கடந்த சில நாட்களாக சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் தனது மகனுக்கு மதிய உணவு எடுத்து சென்று வந்துள்ளார்.
7½ பவுன் சங்கிலி பறிப்பு
சம்பவத்தன்று மொபட்டில் மகனுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து தேரி ரோடு வழியாக அவர் சென்று கொண்டிருந்தாராம். காமராஜர் நகர் விலக்கில் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று ரேவதியின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தாலி சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துள்ளனர். இதில் நிலைதடுமாறிய அவர் மொபட்டிலிருந்து கீழே விழுந்த நிலையில், வழிப்பறி ெசய்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனராம்.
2 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின்பேரில், சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகையை வழிப்பறி செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ெசன்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.