பூப்பெய்திய தங்கை மகளுக்கு19 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு சென்ற தாய்மாமன்கள்

அந்தியூர் அருகே பூப்பெய்திய தங்கை மகளுக்கு 19 மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர்வரிசை கொண்டு சென்ற பாசக்காட்சி அரங்கேறியது.

Update: 2023-05-22 21:10 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே பூப்பெய்திய தங்கை மகளுக்கு 19 மாட்டு வண்டிகளில் தாய்மாமன்கள் சீர்வரிசை கொண்டு சென்ற பாசக்காட்சி அரங்கேறியது.

தாய்மாமன் உறவு

உறவு முறைகளை இன்னும் உயிரோடு வைத்திருப்பது அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகள்தான். தமிழ் சமுதாயத்தில் தாய்மாமன்களுக்கு என்று தனி கவுரம் உண்டு. தங்கை வீட்டிலோ, அக்காள் வீட்டிலோ ஒரு விசேஷம் என்றால் தாய்மாமன்தான் இன்று வரை கதாநாயகன். கடன் பட்டாலும் தான் பட்ட உறவு கடனை தீர்ப்பதும் இந்த உறவுதான். புகுந்த இடத்தில் எவ்வளவு பணம், சொத்து இருந்தாலும் கூடப்பிறந்த அண்ணன், தம்பிகள் என்ன சீர்வரிசை கொண்டு வருகிறார்கள் என்ற ஆர்வமும், ஆசையும் நம் பெண்களுக்கு எப்போதும் குைறயாது. அப்படி ஒரு பாசக்காட்சிதான் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரங்கேறியது.

பூப்புனித நீராட்டு விழா

அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூைர சேர்ந்தவர் விஜயகுமார். ஆசிரியர். அவருடைய சகோதரர் குழந்தைசாமி. இவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

விஜயகுமார், குழந்தைசாமியின் தங்கை ராதாமணி. இவருடைய கணவர் நல்லாகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் பிரம்மதேசம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை உதவி டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் அனன்யா.

இந்தநிலையில் 9-ம் வகுப்பு படித்து வந்த அனன்யா பூப்பெய்தியையொட்டி அந்தியூர் அருகே கரட்டூர் மேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பூப்பு நன்னீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ராதாமணியின் அண்ணன்களான விஜயகுமாரும், குழந்தைசாமியும் தங்கை மகளுக்கு பாரம்பரிய முறைப்படி தடபுடலாக சீர்செய்ய விரும்பினார்கள்.

மாட்டு வண்டிகளில் சீர்வரிசை

அதன்படி அனன்யாவுக்கு தேவையான ஆடைகள், நகைகள், பழவகைகள், பூக்கள், நறுமண பொருட்கள் என ஏராளமான சீர்வரிசை பொருட்களை 19 மாட்டு வண்டிகளில் ஏற்றி பூப்புனித விழா நடைபெறும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள மண்டபத்துக்கு சென்றார்கள். வழிநெடுகிலும் பொதுமக்கள் அதை ஆர்வமாகவும், வினோதமாகவும் வேடிக்கை பார்த்தனர்.

மாட்டு வண்டிகள் மண்டபத்தை அடைந்ததும் சீர்வரிசை பொருட்கள் விழா மேடைக்கு கொண்டு செல்லப்பட்டன. பூப்பெய்த சிறுமியை தாய்மாமன்கள் ஒரு சிறிய பல்லக்கில் வைத்து சுமந்து மேடைக்கு சென்றனர். அதன்பின்னர் வழக்கமான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழா முடிந்த பின்னர் விருந்து உண்டு விட்டு தாய்மாமன்களும், அவருடன் வந்த உறவினர்களும் மீண்டும் மாட்டு வண்டியில் ஏறி ஊருக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்