அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-15 19:07 GMT

கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் செயல்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த கோரியும், கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தியும் கறம்பக்குடியில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அரசு மருத்துவமனை மீட்பு குழு தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை தொடங்கி இரவு வரை போராட்டம் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்