குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவக்கோரி கலெக்டரிடம் பெண் மனு அளித்துள்ளார்.
பெண் குழந்தை
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தீபன் (வயது 35). தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரம்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில், ரம்யா தனது 6 மாத கைக்குழந்தையுடன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை 7 மாதம் ஆன பிறகு, உடல் நிலை பாதிக்கப்பட்டு திடீரென இறந்தது. இதைதொடர்ந்து 2-வதும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தையும் பிறந்த உடன் ஆரோக்கியமாக இருந்தது. நாட்கள் செல்ல, செல்ல குழந்தையின் உடல் நிலையில் மாற்றம் தெரியவந்தது. 3 மாதங்கள் ஆன பிறகு குழந்தையின் கால்களில் அசைவு ஏதும் ஏற்படவில்லை.
அரியவகை நோய் பாதிப்பு
சில நாட்கள் கழித்து கழுத்தும் நிற்கவில்லை. அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்ய தொடங்கினேன். இதற்கிடையே, என் கணவர் தீபன் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். இருப்பினும், குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுசென்று மருத்துவர்களிடம் காண்பித்தேன். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தைக்கு உலகிலேயே அரிய வகை நோயான 'ஸ்பைனல் மஸ்குலர் அட்றோபி வகை- 1' என்ற நோய் தாக்கியுள்ளதாகவும், உலகில் ஒரு சிலருக்கே இது போன்ற நோய் பாதிப்பு இருப்பதாகவும், உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என தெரிவித்தனர்.
உதவிக்கரம் நீட்ட வேண்டும்
மேலும் இதற்கான ஊசி இந்தியாவில் இல்லை, அமெரிக்காவில் தான் உள்ளது, இந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என டாக்டர்கள் தெரிவித்தனர். கணவரை இழந்து, கைக்குழந்தையுடன் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள என்னால் அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தைக்கு ஊசி செலுத்த மருத்துவர்கள் அளித்த காலக்கெடு குறைந்து கொண்டே வருவதால் என் குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து விசாரணை நடத்தி குழந்தையை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை செய்ய உத்தரவிட்டார்.