'இந்தியாவை ஆளும் நிலைக்குதிராவிட மாடல் வந்துவிட்டது': கனிமொழி எம்.பி.

‘இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்துவிட்டது’ என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-08 18:45 GMT

'இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது' என்று தூத்துக்குடியில் நடந்த தி.மு.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-வது தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்புஅழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னவர் மோடி, ஆனால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியதை ஏன் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். உரிமைத் தொகை செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும். பெண்களுக்கான இலவச பஸ் பயணம் மூலம் அவர்களுக்கு ஒருவகையில் விடுதலை கிடைத்து உள்ளது. யாரையும் எதிர்பார்க்காமல் உறவினர் மற்றும் பெற்றோர் அருகிலிருந்தால் பார்க்க செல்வதற்கு வசதியாக உள்ளது. அதன் மூலம் ரூ.1000 வரை பலருக்கு மிட்சமாகிறது. அதை சிலர் சேமிப்பாகவும் பலர் சாப்பாடு தேவைக்கும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

திராவிடமாடல் ஆட்சி தொடக்கத்திற்கு முன்பு நீதி கட்சி மூலம் சென்னையில் மட்டும் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவாக மாறி எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவாக மாறி கலைஞர் ஆட்சியில் முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல் படுத்தாத திட்டமான தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இப்படி தினம் தோறும் மக்களுக்கான திட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்தலாம் என்று சிந்தித்து செயல்படும் ஆட்சியை பார்த்து திராவிடம் காலாவதியாகி விட்டது என்று கவர்னர் பேசுகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் தளபதி தமிழகத்தில் உள்ள 2200 கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாத்து உள்ளார். இதை சனாதனம் செய்யவில்லை. திராவிடம் தான் செய்தது. யாருக்கெல்லாம் என்ன தேவை என்று சிந்திப்பதுதான் திராவிடம்.

காலாவதி

கவர்னர் பதவி ஒரு அலங்கார பதவிதான் என்று அம்பேத்கர் கூறினார். ஆங்கிலேயர் கொண்டு வந்த பலவற்றை வேண்டாம் என்று கூறும் நிலையில் அவர்கள் கொண்டு வந்த கவர்னர் பதவியையும் எடுத்துவிடலாம். திராவிடம் காலாவதியாகிவிட்டது என்று சொல்பவர்கள் காலாவதியாகிவிடுவார்கள். இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது. ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணி மண்டபம் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துதல் தூர் வாருதல் பணிகள் நடைபெறுகின்றன. கோரம்பள்ளம் குளம் ரூ.12 கோடியில் தூர் வாருதல், உப்பளத் தொழிலாளர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் மழைகாலங்களில் 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி அதற்கு தனிநலவாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் 8400 பேர் பயனடைவார்கள். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கடன் பெறுதல் உள்ளிட்டவைகள் மூலம் பயன் பெறுவார்கள் என்று கூறினார்.

கூட்டத்தில் துணைச்செயலாளர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்