குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கதோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்
கூடலூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே கோம்பை, பண்ணைப்புரம் பகுதிக்கு கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வெளியேறியது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள், குழந்தைகள் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியத் துறையினர் உடனடியாக சீரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.