தாகம் தீர்க்க தான்..இந்த பாடு..!
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
பொ துவாக சைக்கிளில் பின்புற இருக்கையில் இருபுறமும் கயிறு கட்டி குடங்களில் தண்ணீர் எடுத்து செல்வதை பார்த்து இருப்போம். தற்போது ஸ்கூட்டி, மொபட்டில் முன்புறம் குடங்களை வைத்து தண்ணீர் எடுத்து செல்வதை பார்த்து இருக்கிறோம்.. இது என்ன புதுமாதிரியாக ஸ்கூட்டிக்கு பின்புறம் தள்ளுவண்டிகளை டிராக்டர் போல இணைத்து இளைஞர்கள் எடுத்து செல்கிறார்களே என படத்தை பார்த்ததும் நினைக்க தோன்றும். எல்லாம் தாகம் தீர்ப்பதற்காக தான் இந்த பாடு. வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள களக்குடி கிராமத்துக்கு தள்ளுவண்டிகளுடன் ஸ்கூட்டியில் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். மின்கட்டண உயர்வை தடுக்க.. மின்சாரத்தை சிக்கனம், இக்கனம் என்பார்களே! அது போல தான் இந்த மாவட்டத்தில் ஒரு டம்ளர் தண்ணீரையும் மிக சிக்கனமாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.