பணி பாதுகாப்பு வழங்கக்கோரிகிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்;கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்பு

பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-26 21:57 GMT

பணி பாதுகாப்பு வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 56). இவர் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலேயே மா்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் வட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார்.

பணியில் பாதுகாப்பு

ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியில் ஈடுபடும் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறையினருக்கும் பணியில் பாதுகாப்பு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கிராம நிர்வாக அதிகாரிகள், நில அளவையாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட வருவாய்த்துறையினர் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்