தண்ணீர் திருட்டை தடுக்கக்கோரிஆற்றில் இறங்கி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனி அல்லிநகரத்தில் தண்ணீர் திருட்டை தடுக்கக்கோரி ஆற்றில் இறங்கி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-14 18:45 GMT

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைப் பகுதியில் பனசலாறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றில் இருந்து மீறுசமுத்திரம் கண்மாய், சின்னக்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். இந்நிலையில், இந்த ஆற்று தண்ணீரை தனி நபர்கள் சிலர் தங்களின் தோட்டங்களுக்கு அனுமதியின்றி குழாய்கள் மூலம் எடுத்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுக்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆற்றுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

அதன்படி, அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் அருகே உள்ள பனசலாற்றுக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் காஜாமைதீன், நகர தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் லட்சுமிகாந்தன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேம்ஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பனசலாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும், தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்