திருவாரூர்:
திருவாரூர் அருகே நெடுஞ்சேரியில் சாராய விற்பனையை தடுக்கக்கோரி கிராம மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நெடுஞ்சேரி கிராம மக்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குடவாசல் தாலுகா நெடுஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சாராயம் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதான சாலை பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதால் தினமும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அந்த வழியாக செல்லும் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சாராய விற்பனையால் பலரும் குடிக்கு அடிமையாகுவதால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கோவில்பத்து பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் கணவர் குடிக்கு அடிமையாகியதால், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தடுக்க நடவடிக்கை
இதுகுறித்து பலமுறை போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருவாரூர் அருகே நெடுஞ்சேரியில் சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.