சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்தக்கோரிமேயர், கமிஷனர் அலுவலகங்கள் முன்பு மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள் போராட்டம்
சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்தக்கோரி மதுரை மாநகராட்சி மேயர், கமிஷனர் அலுவலகங்கள் முன்பு அமர்ந்து மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்தக்கோரி மதுரை மாநகராட்சி மேயர், கமிஷனர் அலுவலகங்கள் முன்பு அமர்ந்து மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஒப்பந்த ஊழியர்கள்
மதுரை மாநகராட்சியில், கடந்த பல ஆண்டுகளாக ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பதிலாக, புதிய ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில்தான் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் மாநகராட்சியில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகளவில் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்த ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். எனவே மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒப்பந்ததாரரிடம் மட்டுமே வழங்கும். அதனை ஒப்பந்ததாரர், ஊழியர்களிடம் வழங்குவார்.
இந்த நிலையில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட இலகுரக வாகன டிரைவர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு வந்தனர். அங்கு மேயர் இந்திராணி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் மேயர் இந்திராணியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மீண்டும் மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அமர்ந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வங்கி கணக்கு
இது குறித்து அவர்கள் கூறியதாவது:- மதுரை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவதற்கு இலகுரக வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை இயக்க ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எங்களுக்கு தினக்கூலியாக தமிழக அரசு தற்போது ரூ.791 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் இது ரூ.631 ஆக உள்ளது. ஆனால் ஒப்பந்ததாரர் எங்களுக்கு ரூ.400 என்ற அளவில்தான் தருகிறார். அரசின் விதிப்படி எங்களுக்கு இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். வசதி செய்து தர வேண்டும்.
ஆனால் அதுவும் செய்யவில்லை. மேலும் எங்களது சம்பளத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஆனால் கையில்தான் பணமாக தருகிறார்கள். கடந்த மாதம் சம்பளம் எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. நாங்கள் எங்களது பிரச்சினைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் மேயர், கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.