ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2022-09-16 20:43 GMT

மதுரை,

மதுரை ஐகோர்ட் கிளையில் திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனுதர்ம, வேத இதிகாசங்களை எரித்து போராட்டம் நடத்த உள்ளதாக மக்கள் அதிகாரம் கட்சியினர் அறிவித்துள்ளதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மதுரை ஐகோர்ட் கிளையின் நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, "போராட்டம் குறித்து மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் சேர்ந்தவர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மதத்தினரையோ, அவர்களது வழிபாட்டு முறைகளையோ அவமதிக்கும் விதமாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. இதை மீறி போராட்டம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "அவரவர் விரும்பிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம், அதில் நாம் தலையிட முடியாது. மனுதாரர் கோரிக்கை குறித்து போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்