ஸ்ரீவைகுண்டத்தில் போலீசாரின் பணியை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்
ஸ்ரீவைகுண்டத்தில் போலீசாரின் பணியை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை கோட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் பணியை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய போலீஸ் செயலி
ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் புதிய செயலி அறிமுக கூட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கணினி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த புதிய செயலியுடன் ஸ்ரீவைகுண்டம் கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் ேபாலீசாரின் செல்போன் எண்கள் ஜி.பி.ஆர்.எஸ் மூலமாக இணைக்கப்படும்.
போலீசாரின் பணியை கண்காணிக்க..
இதன் மூலமாக போலீசார் எந்தெந்த இடத்தில் என்னென்ன பணியில் உள்ளனர்? பணி நேரத்தில் சரியாக செயல்படுகிறார்களா? என்பது குறித்த அனைத்து விபரங்களையும் போலீஸ் அதிகாரிகள் தெளிவாக அறிய முடியும்.
அத்துடன் இந்த புதிய செயலி மூலமாக உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட போலீசாருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என விரிவாக எடுத்துரைத்தார்.
பயிற்சி
மேலும், புதிய செயலி செயல்படும் விதம் குறித்தும், அந்த செயலி மூலமாக தொலைந்து போன வாகனங்கள், செல்போன்கள் குறித்த விபரங்கள், குற்றவாளிகளின் பதிவுகளை அறியும் முறைகள் குறித்தும் அவர் போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.
இக்கூட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் ஏட்டுகள், போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.