பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தில் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது. 11 ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பதா?
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 181-ம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பணி நிலைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு நடத்த வேண்டும். மேலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.