மனநலம் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தமாந்திரீக பூஜைகள் செய்வதாகரூ.65 லட்சம் மோசடி:தம்பதி உள்பட 3 பேர் கைது

மனநலம் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்த மாந்திரீக பூஜைகள் நடத்துவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-31 18:45 GMT

பரிகார பூஜைகள்

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது கணவர் 2003-ம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்த சந்திரசேகரன், அவருடைய மனைவி விஜி ஆகியோர் எனது மாமியாரிடம் அறிமுகம் ஆகினர். அவர்கள் எனது கணவருக்கு நேரம் சரியில்லை என்றும், தேவதானப்பட்டியில் உள்ள கோவில் மற்றும் எங்களது வீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் எனது மாமியாரிடம் கூறினர்.

ரூ.65 லட்சம் மோசடி

பரிகாரம் செய்வதற்கு பில்லி சூனியம், நடுராத்திரி பூஜை மற்றும் மலையாள குருஜி பூஜை போன்றவை செய்தால் உடல்நிலை மற்றும் மனநிலை சரியாகிவிடும் என்றார்கள். அதை நம்பிய எங்களிடம், கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் ஜோதி பரிகாரம், மாந்திரீக பூஜைகளுக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். இதனால் சந்திரசேகரன் மற்றும் அவருடைய மனைவியிடம் ரொக்கமாகவும், அவர்கள் கூறியதன்பேரில் பாண்டி ரமேஷ், ஆனந்த் என்பவர்களின் வங்கிக் கணக்கிலும் பல்வேறு தேதிகளில் ரூ.65 லட்சம் வரை அனுப்பினோம்.

ஆனால் எனது கணவரின் மன நல பாதிப்புக்கான எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்கள் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

3 பேர் கைது

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், மாந்திரீக பூஜைகள் செய்வதாக கூறி பணம் மோசடி செய்ததாக சந்திரசேகரன், விஜி, பாண்டி ரமேஷ், ஆனந்த் ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி வழக்குப்பதிவு செய்தார். இதில் சந்திரசேகரன், விஜி, ஆனந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்