அரசுத்துறையில் டிரைவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசுத்துறையில் டிரைவர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வெங்கடாஜலபதி, பொருளாளர் வேல்முருகன், துணைத்தலைவர் உதயக்குமார், தணிக்கையாளர் மாரிமகாராஜா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டு சங்கத்தின் கோரிக்கைகள், வளர்ச்சி குறித்து பேசினார். கூட்டத்தில் அரசுத்துறையில் ஊர்தி ஓட்டுனர்கள் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். படித்த டிரைவர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட பொருளாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.