வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும்
வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.
வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.
நடைபயணம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நடைபயணத்தை நிறைவு செய்து வைத்த இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் வேலையின்மை பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது. மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஜாதி மோதலுக்கு வேலையின்மை பிரச்சினையே காரணமாக அமைந்திருந்தது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைத்த குழுவினர் ஜாதி மோதல்களை தவிர்க்க தொழில் தொடங்கி வேலைவாய்ப்பளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
ஜவுளி பூங்கா
விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி காரணமாக விவசாயம் பாதித்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜவுளி பூங்காவை உடனடியாக தொடங்குவதுடன், காரியாபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதிக்கக்கூடிய சாயப்பட்டறை திட்டத்தை கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும்.
இதனை அப்பகுதி மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பிரச்சினையை கடந்த 5 ஆண்டு காலமாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எழுப்பாத நிலையில் தற்போது தி.மு.க. எம்.பி.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ஆகியோர் இப்பிரச்சினை பற்றி வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு தொழில்களை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்-சாத்தூர் இடையே ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். சாயப்பட்டறை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.