ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த 196 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2022-09-21 19:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் 196 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

சிறப்பு மருத்துவ முகாம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் குறிப்பாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே ஏற்பட்டது. ஆனால் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும், காய்ச்சல் பாதிப்பு உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

196 இடங்கள்

வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தினார்கள். இந்த முகாமில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சலின் தன்மையை பொறுத்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் வழங்கப்பட்டன. தொடர் காய்ச்சல் உள்ளவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தேவைப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 196 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்