தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்த பட்டதாரிகள்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்த பட்டதாரிகள்

Update: 2022-07-06 17:31 GMT

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர்.

தற்காலிக ஆசிரியர் பணி

தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. இந்த பள்ளிக்கூடங்களில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு்ள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்கள் உள்ளன.

பட்டதாரிகள்

மேலும் முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்- 18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசி நாள் ஆகும்.

இதனால் நேற்று காலை முதலே ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஏராளமான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள், அவர்களது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர். இதேபோல், பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்