தாட்கோ கடனுக்கு விண்ணப்பிக்கஅரசு கால்நடை டாக்டர் முத்திரையுடன் பூர்த்தி செய்யப்படாத படிவங்கள் வினியோகம்:கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ கடனுக்கு விண்ணப்பிக்க, அரசு கால்நடை டாக்டரின் முத்திரையுடன் பூர்த்தி செய்யப்படாத படிவத்தை தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர், மக்களுக்கு வினியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-07-25 18:45 GMT

பூர்த்தி செய்யாத படிவத்தில் முத்திரை

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாட்கோ அலுவலகம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கால்நடைகள் வளர்ப்புக்கான கடன் வழங்குவது தொடர்பான விண்ணப்பங்கள் நேற்று பெறப்பட்டன. இதில் விண்ணப்பிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர். அப்போது, கலெக்டர் அலுவலக கூட்டரங்கிற்கு வெளியே காருக்குள் ஒரு நபர் அமர்ந்து கொண்டு, விண்ணப்பிக்க வந்த மக்களுக்கு ஒரு படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி கொண்டு இருந்தார்.

அவ்வாறு பூர்த்தி செய்து கொடுத்த படிவத்துக்கு அவர் பணம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரிடம் பூர்த்தி செய்யாத படிவங்களும் இருந்தன. அந்த படிவங்களில் அரசு கால்நடை டாக்டர் ஒருவரின் முத்திரை மற்றும் கையொப்பம் இருந்தது. கால்நடை டாக்டரின் கையெழுத்துடன் இருந்த பூர்த்தி செய்த படிவங்களை பார்த்த சிலர், அதை எடுத்துச் சென்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கொடுத்தனர்.

கலெக்டர் விசாரணை

அதைப் பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் காவலாளி ஒருவரை கூப்பிட்டு வெளியே சென்று அந்த நபரை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் அவர் அங்கு சென்று பார்த்தபோது அந்த நபர் காரில் தப்பி சென்றுவிட்டார். பின்னர் விசாரணை நடத்தியதில், அந்த படிவம் விண்ணப்பத்துடன் இணைப்பதற்கான கால்நடைகளின் விலைப்பட்டியல் அடங்கிய திட்ட மதிப்பீட்டு படிவம் என்று தெரியவந்தது. மேலும் அதை வினியோகம் செய்த நபர், ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து பெறப்பட்ட விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்தபின்னரே வங்கிக்கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தாட்கோ அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே முகாமில் விண்ணப்பிக்க வந்த எண்டப்புளி, லட்சுமிபுரம் பகுதிகளை சேர்ந்த மக்களிடம், ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால் தான் புதிதாக விண்ணப்பிக்க முடியும் என்று கூறி சிலர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்