ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-10-28 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கைம்பெண்கள் (விதவைகள்) மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளை செய்து கொடுக்க கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுயஉதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன், கன்னியமான முறையில் வாழ்வதற்கான இந்த நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நல வாரியத்துக்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை https://theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் வருகிற 4-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமுக நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்