மாவட்டத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

மாவட்டத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைய அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு, தர்மபுரியில் நடந்த பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

Update: 2022-12-11 19:30 GMT

தர்மபுரி:-

மாவட்டத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைய அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு, தர்மபுரியில் நடந்த பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

வளர்ச்சி இலக்குகள்

நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து துறை அலுவலர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் ஜேக்கப் வேதகுமார், மாவட்ட திட்ட பிரிவு அலுவலர் மாரிமுத்துராஜ், புள்ளியியல் துறை அலுவலர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தமிழகத்தில் தரமான கல்வி, பாலின சமத்துவம், நல்வாழ்வு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட 17 வகையான நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து அவற்றில் மாவட்ட, வட்டார அளவில் குறியீடுகளை தகவல் இணையதளம் வாயிலாக பதிவேற்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன்படி தர்மபுரி மாவட்ட அளவில் 14 வகையான குறியீடுகளும், வட்டார அளவில் 93 வகையான குறியீடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

இதன் தொடர்ச்சியாக நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து வட்டாரங்கள் அளவில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் அனைத்து துறை அலுவலர்களும், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரிக்கும் விவரங்களை இணையதளம் வாயிலாக அந்தந்த துறைகளுக்கான குறியீடுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்