ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ்
ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ்
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் லிடியா (வயது 28). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக லிடியா வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் இருந்து கூட்டப்புளி செல்லும் அரசு பஸ் வந்தது. அதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கூட்ட நெரிசலுக்கு மத்தியில் லிடியா பஸ்சில் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில், லிடியா தனது கைப்பையில் இருந்து பயணச்சீட்டுக்கு பணம் எடுக்க திறந்தார்.
அப்போது அவரது கைப்பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. இதனால் கதறி அழுத லிடியா, தனது பணத்தை யாரோ திருடி விட்டதாக கூறி அழுதார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மஆசாமி ரூ.15 ஆயிரத்தை அபேஸ் ெசய்தது தெரியவந்தது. இதற்கிடையே பஸ் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் பணம் யாரிடமும் இல்லை. இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.