டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பும் இடம்பெற்றது
டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில், குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பும் இடம்பெற்றது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வர்கள் தயாராகும் வகையில் தயாரித்து வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த வாரத்தில் அடுத்த ஆண்டுக்கான (2023) டி.என்.பி.எஸ்.சி. ஆண்டுத் திட்ட அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-4 உள்பட சில பதவிகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. அதிலும் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு மட்டும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும், தேர்வை பொறுத்தவரையில் 2024-ம் ஆண்டு தான் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குரூப்-1 அறிவிப்பும் இடம்பெற்றது
மேலும், குரூப்-1, குரூப்-2, 2ஏ போன்ற எதிர்பார்ப்புமிக்க உயர் பதவிகளுக்கான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது தேர்வர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதுதொடர்பாக தேர்வர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வந்தன. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தன்னுடைய ஆண்டுத் திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிக்கான அறிவிப்பை இடம்பெற செய்து, புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டிருக்கிறது.
அதில், குரூப்-1 பதவிக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், நவம்பர் 23-ந்தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கான தேர்வு முடிவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.